மனதினிலே விடையற்ற வினாக்களில் ஒர் வினா

அவசர வேகத்தில் ஓடிக்கொண்டிருக்கும் இந்த நேரத்திலே உங்களுடன் ஓர் சில நிமிடம் மனம் திறக்க ஆவலாய் உள்ளேன். எம்மைச் சுற்றியுள்ள இந்தச் சமுதாயத்திற்காக நாம் வாழ்கின்றோமா? அன்றி எமக்காக இந்தச் சமுதாயாமா? இது என் மனதினிலே நீண்ட நாளாக விடையின்றிய தேடல்களில் ஓர் வினா.

நமது செயல்களினாலோ அல்லது அவற்றிற்கான காரணங்களினாலோ சமுதாயத்தின் தாக்கங்கள் நிச்சயமாய் நிதர்சனமாகிக் கொண்டுதான் இருக்கின்றது. இந்நிகழ்வானது தவிர்க்க முடியாததொன்று. நாம் எல்லாவற்றையும் ஒப்பிட்டு பார்க்கும் ஓர் மன நிலையை எம்மை அறியாமலே அடைகின்றோம். பல சமயங்களில் எமது ஒப்பிடல் தராசுத்தட்டு நாம் எதனோடு அல்லது எவரோடு ஒப்பிட்டு பார்க்கின்றொமோ அந்தத் தட்டை விட மேலேயே நிற்கின்றது. இது எம்முடைய எதிர்பார்ப்புக்கு ஏமாற்றத்தையே அளிக்கின்றது.


ஓர் சிறிய உதாரணத்தை எடுத்தோமானால் ஒரு பெண்ணோடு நகைக்கடைக்குப் போகின்றோம். உள்ளே நுழையும் போது என்ன வாங்கப் போகின்றோம் என்ற ஓரு தீர்மானத்துடன் தான் போவதாக எண்ணுகின்றோம். ஆனால் அந்தக் கடையை விட்டு வெளியேறும் போது முற்றிலும் வேறுபட்ட ஓர் பொருளுடன் அல்லது வேறு சில பொருள்களுடன் வெளி வருகின்றோம். உள்ளெ சென்றதற்கும், வெளியே வருவதற்கும் இடைப்பட்ட அந்த நேரத்தினிலே எமது மனத்தினிலே எதிர்பார்ப்பு, ஏமாற்றம்,ஒப்பிடுகை ஆகிய உணர்ச்சிகளுக்கிடையே ஓர் போராட்டம் நடக்கின்றது. இந்த உணர்ச்சிகளில் எது வெற்றி பெறுகின்றதோ அதன் விளைவே எமது கைகளில் இறுதியாக வாங்கிய அந்தப் பொருள்.

நம்மில் பலர் வாழ்க்கையிலே ஒரு கொள்கையைக் கொண்டிருப்பதாக எண்ணுகின்றோம். இது உண்மையிலேயே போலியான நம்பிக்கை. ஒரு இளைஞன் மிகவும் எளிமையாகவும் சிக்கனமாகவும்தனது வாழ்க்கையை நடத்துவேன் என்ற கொள்கையுடன் திருமண வாழ்வில் நுழைகின்றான். ஆனால் சமுதாயம் எனும் தண்டவாளத்தின் சீரற்ற நிலையினால் அவனது கொள்கை இரயில் தடம் புரளுகின்றது. குடும்பம் எனும் அன்பு வலை
சமுதாயம் எனும் புயல் காற்றின் உதவியுடன் அவனை இறுகப் பின்னி விடுகின்றது.

எளிமையான சிக்கன வாழ்க்கை என்ற அவனது கொள்கை அவனாலேயே தொலைந்து போகின்றது. அவனால் தேடப்பட்ட சொந்தங்களின் தாக்கங்களினால் அவனைச் சுற்றியுள்ள அவனது வாழ்க்கை முறை மாறுகின்றது. எதை அவசியமற்ற செலவுகள் என்று எண்ணினானோ அவை அவசியமாகின்றன. ஆக நமது வாழ்க்கையை நினைக்கும் போது சில யதார்த்தங்களை எமது மனம் உணர்ந்து கொள்ள மறுக்கின்றது. உண்மையிலே சமுதாயத்தின் தாக்கத்தின் விளைவுகள் வாழ்வின் பாதை
யையே மாற்றுகின்றது. ஆக மொத்ததில் கொள்கை என்பது கவர்ச்சியான வார்த்தை என்பதே உண்மை.

சமுதாயமின்றி நாமில்லை, நாமின்றி சமுதாயமில்லை என்னும் எண்ணக்கருவில் யார் யாரை நடத்திச் செல்கின்றார்கள் என்பது இன்றுவரை என் மனதினில் விடையற்ற வினாவாகவே இருக்கின்றது. இது வினாவாகவே கடந்து விடுமோ?............

0 comments:

Post a Comment